5.2.14

நுண்ணோக்கியின் கண்டுபிடிப்பு




கண்ணுக்குப் புலப்படாத பாக்டீரியா போன்ற மிகச் சிறிய உயிர்களை, அவற்றின் இயல்பான அளவைவிட பல மடங்கு பெரிதாக்கிக் காண்பிப்பது நுண்ணோக்கி. இதுதான் அறிவியல் வளர்ச்சிக்கு முக்கிய ஆதாரம். செல்கள், மூலக்கூறு, ரத்தம், அணு இவை குறித்தான ஆராய்ச்சி நுண்ணோக்கி இல்லாமல் சாத்தியமில்லை. இவ்வளவு சிறப்புமிக்க நுண்ணோக்கியைக் கண்டுபிடித்தது பெரிய அறிவியல் மேதையோ, வல்லுநரோ அல்ல. நெதர்லாந்தைச் சேர்ந்த ஒரு சாதாரணத் துணி வியாபாரிதான். அவர் பெயர் ஆண்ட்டன் வான் லியுவென்ஹொக்.
ஆண்ட்டனுக்கு ஐந்து வயதாக இருந்தபோது அவருடைய தந்தை இறந்துவிட்டார். குடும்ப வறுமை காரணமாகப் பள்ளிப் படிப்பை முடித்தவுடன் நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் ஒரு துணிக் கடையில் வேலைக்குச் சேர்ந்தார் ஆண்ட்டன். அங்கு அவருக்குத் துணிகளின் தரத்தைச் சோதிக்கும் வேலை கொடுக்கப்பட்டது. அதற்காக அவர் சில கண்ணாடிகளைப் பயன்படுத்த வேண்டியிருந்தது. முன்பே இத்தொழிலில் ஆடிகள் பயன்பாட்டில் இருந்துவந்தன. ஆனால், ஆண்ட்டன் எவ்வளவு கவனமாக வேலை செய்தாலும் துணிகளில் உள்ளச் சின்ன சின்ன குறைபாடுகளை அவரால் கண்டுபிடிக்க முடியாமல் போனது. ஆனால், சந்தையில் கிடைத்த அதிகபட்சத் திறன்கொண்ட ஆடிகளால்கூடத் துணிகளில் உள்ளச் குறைபாடுகளைப் பெரிதாக்கிக் காண்பிக்க முடியவில்லை.

அதனால் தன்னிடம் இருந்த ஆடிகளைத் தேய்த்து இரு குவி ஆடிகளால் ஆன நுண்ணோக்கியை ஆண்ட்டனே கண்டுபிடித்தார். அதனால் அதன் பெரிதாக்கும் திறன் 250 மடங்காக உயர்ந்தது. இதை வைத்து நீரில் உள்ள மிக நுண்ணிய உயிரிகளைக் கண்டார். ரத்த அணுக்களைக் கண்டார். முக்கியமாகப் பாக்டீரியா என்னும் நுண்ணுயிரியை முதல்முறையாகக் கண்ட கண்கள் அவருடையவைதாம். இது முக்கியமான வரலாற்று நிகழ்வு. அதன் பிறகுதான் முக்கியமான அறிவியல் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
இதற்கிடையில் அவரே சொந்தமாகத் துணி வியாபாரம் ஆரம்பித்துப் பெரும் வெற்றிபெற்றார். அதைத் தொடர்ந்து 1667ஆம் ஆண்டில் தொழில் நிமித்தமாக ஆண்ட்டன் வான் லியுவென்ஹொக் லண்டன் சென்றார்.
தேம்ஸ் நதியின் வழியாக அவர் லண்டன் சென்றார். அங்கு நதியில் உள்ள பாறைகளைக் கண்டார். வெள்ளை நிறத்தில் இருந்த அவற்றைக் கையில் எடுத்துச் சென்று ஆராய்ந்தார். அவருடைய நுண்ணோக்கி அதன் உண்மையான நிறத்தைக் காட்டியது; அப்பாறைகள் கண்ணாடியைப் போல் இருந்துள்ளன. இச்சம்பவம் அவருக்கு அறிவியல் மீது ஒரு ஈர்ப்பைத் தூண்டியிருக்கிறது.
லண்டனில் அவருடன் இருந்தவர்கள் அனைவரும் துணி வியாபாரிகளே. அவர்களில் எவரும் நுண்ணோக்கியைப் பற்றியோ, அதைத் தங்கள் தொழிலுக்கு எப்படிப் பயன்படுத்துவது என்பது பற்றியோ அறிந்திருக்கவில்லை.
ஆனால், அவர்களில் ஒருவர் மைக்ரோகிராஃபியா (Micrographia) என்னும் புத்தகத்தை ஆண்ட்டனுக்கு அறிமுகப்படுத்தினார். அப்புத்தகம் ஆங்கில விஞ்ஞானியான ராபர்ட் குக்கின் ஆய்வு. லண்டன் ராயல் சொசைட்டி 1665ஆம் ஆண்டு வெளியிட்டிருந்த அப்புத்தகம் ஆங்கிலத்தில் இருந்ததால் ஆண்ட்டனால் அதை வாசிக்க இயலவில்லை. அவருக்குத் தாய்மொழியான டச்சு மட்டுமே தெரியும். இருந்தாலும் அப்புத்தகத்தில் உள்ள ஆய்வுகள் குறித்துக் கேட்டு அறிந்துகொண்டார். இந்தப் பயணத்திற்குப் பிறகு அவரது கவனம் முழுவதும் அறிவியல் துறை மீது திரும்பியது.
தனது லண்டன் பயணத்துக்குப் பிறகு ஹாலந்து திரும்பிய ஆண்ட்டன், அறிவியல் துறை குறித்தான தன் அறிவை வளர்த்துக்கொள்ளும் ஆவல் கொண்டார்.
டேல்பட்டில் நடந்த மருத்துவர்கள் குழுவின் வாராந்திரக் கூட்டத்திற்குச் செல்லும் வழக்கத்தைக் கடைப்பிடித்தார். அக்கூட்டங்களின் மூலம் அவருக்கு உடற்கூறு அமைப்பியல் குறித்தான புதுப்புது நுட்பங்கள் தெரிய வந்தன. அது அவருக்கு விருப்பமானதாகவும் இருந்தது. அங்குள்ள மருத்துவர்கள் அனைவரும் அவருக்கு நண்பர்கள் ஆனார்கள். அவர்கள் அறிவியலை அவருக்குக் கற்றுக்கொடுத்தார்கள்.
அந்த மருத்துவ நண்பர்களில் ஒருவர்தான் ஆண்ட்டனின் வாழ்க்கையை மாற்றி அமைத்தார். அவர் பெயர் ரெய்னியர் டிக்ராவ் (Regnier de Graaf). இவர் 1673ஆம் ஆண்டு ஏப்ரல் 28ஆம் நாள் லண்டன் ராயல் சொசைட்டிக்கு ஆண்ட்டனின் கண்டுபிடிப்புகள் பற்றி அவர் கடிதம் எழுதினார். லண்டன் ராயல் சொசைட்டி என்பது ஆங்கில விஞ்ஞானிகளின் அமைப்பாகும். அங்கு புதிய கண்டுபிடிப்பாளர்கள் சந்தித்துத் தங்கள் கண்டுபிடிப்புகள் குறித்துப் பகிர்ந்துகொள்வது வழக்கம். இது ஐரோப்பாவில் பிரசித்தி பெற்ற அமைப்பாகும். இந்த அமைப்பின் செயலரான ஹென்றி ஓல்டன்பர் ஐரோப் பாவின் மற்ற பகுதிகளின் புதிய கண்டு பிடிப்புகள் பற்றி தெரிவிக்குமாறு ஐரோப்பிய விஞ்ஞானி களைக் கேட்டுக்கொண்டிருந்தார். அதன்பேரில் ஆண்ட்டனின் கண்டு பிடிப்புகள் ரெய்னியர் டிக்ராவால் பரிந்துரைக்கப் பட்டன. லண்டன் ராயல் சொசைட்டி இக் கண்டுபிடிப்பை 1680இல் அங்கீகரித்தது. அதன் பிறகுதான் ஆண்ட்டன் என்னும் எளிய மனிதனின் கண்டு பிடிப்பை உலகம் அறிந்துகொண்டது.
                                                                                               நன்றி: தி இந்து 

No comments:

Post a Comment