5.10.11

இயற்பியலுக்கான நோபல் பரிசு

பிரபஞ்சம் விரிவடைவது தொடர்புடைய கண்டுபிடிப்புக்காக இயற்பியலுக்கான நோபல் பரிசு அமெரிக்க விஞ்ஞானிகள் மூவருக்கு செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டது.


அமெரிக்காவின் சால் பெர்ல்மட்டர், அமெரிக்காவில் பிறந்து ஆஸ்திரேலியாவில் ஆராய்ச்சி மேற்கொண்டுவரும் பிரையன் ஷுமிட், அமெரிக்காவின் ஆடம் ரீஸ் ஆகியோர் 2011-ம் ஆண்டுக்கான விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.


1990 முதல் அவர்கள் மூவரும் ஆய்வு செய்துள்ளனர். மிகத் தொலைவிலுள்ள 50 சூப்பர்நோவாக்கள் எதிர்பார்த்ததைவிட வலுவற்ற அளவிலேயே ஒளியை உமிழ்வதை அவர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதனால் பிரபஞ்சம் அதிக வேகத்தில் விரிவடைவதாக முடிவுக்கு வந்துள்ளனர். இதன் வேகம் அதிகரித்தால் பிரபஞ்சம் பனிப்பாறையாக மாறிவிடும் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 1959-ல் அமெரிக்காவில் பிறந்த பெர்ல்மட்டர், பெர்க்லேவில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் சூப்பர்நோவா புவி விஞ்ஞான திட்டத்தின் தலைவராக உள்ளார்.
1967-ல் அமெரிக்காவில் பிறந்த ஷுமிட் ஆஸ்திரேலியாவில் வெஸ்டன் கிரீக் பகுதியில் உள்ள ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தில் ஹை-இசட் சூப்பர்நோவா ஆராய்ச்சிக்குழுவின் தலைவராக உள்ளார்.
1969-ல் அமெரிக்காவில் பிறந்த ரீஸ் பால்டிமோரில் உள்ள ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தில் வானவியல் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்.


நன்றி : தினமணி

No comments:

Post a Comment